search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடை அளவுகள்"

    நாமக்கல் மாவட்டத்தில் 70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர்.
    நாமக்கல்:

    சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் அறிவுறுத்தலின்படி எடை அளவுகளில் முத்திரையிடாத நகைக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மஞ்சள்நாதன் தலைமையிலான குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர், மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 36 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின்போது நகைக்கடை வணிகர்களிடம், தங்களது நிறுவனங்களில் உள்ள எடையளவுகளின் மதிப்பில் 10-ல் ஒருபங்கு அளவு சோதனை எடைகற்கள் வைத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எடையளவு குறித்த சந்தேகங்கள் எழும் பட்சத்தில் சோதனை எடைகற்களை கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தவறாது தங்களது எடை அளவுகளை மறுமுத்திரையிடவும், மறுமுத்திரையிடாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் சங்கர், ராகவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், ராஜன், சுதா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ×